Showing posts with label சிங்கள. Show all posts
Showing posts with label சிங்கள. Show all posts

சிங்களக் குடியேற்றத்திற்கு முஸ்தீபு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா என்னும் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள், வயல் நிலங்கள் மற்றும் குளங்களை கபளீகரம் செய்து நடைமுறைப்படுத்தவும் மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை
கிராமங்களில் மண்கிண்டி மலை, ஆமையன் குளம், முந்திரிகை குளம், சிலோன் தியேட்டர்ஸ் பண்ணை, கென்பண்ணை, வெடிவைத்தகல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் சில கிராமங்கள் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களாகும். இவை தற்போது சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்னு ம் பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இத் திட்டத்திற்காக இராமன் குளம், கொட்டோடைக் குளம், வெள்ளான் குளம், ஒயாமடு குளம் ஆகிய குளங்கள் மூடப்படவுள்ளதுடன் இந்தக் குளங்களின் நீர்ப்பாசனத்தின் ஊடாக செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல் நிலங்களும் கபளீகரம் செய்யப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு பகுதியின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களையும் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்து அங்கே குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வி வசாயம் செய்வதற்கான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக புதிதாக ஒரு தொகுதி சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாண சபையின் அமர்வில் விசேட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்;

முல்லைத்தீவில் சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஒயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மற்றும் அந்தக் குளங்களின் கீழான நீர்ப்பாசனம் பெறும் விவசாய நிலங்களை மூடி மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும்.

இந்தக் காணிகளுக்கான ஆவணங்களை மக்கள் வைத்திருக்கும் நிலையில், மயில்குளம் என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காணி ஆவணங்களை வழங்கினார்.

அந்த மயில்குளம் கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களும் இனிமேல் குடியேற்றப்படும் சிங்கள மக்களும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காவே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

மிக வேகமாக பரவிவரும் சிங்களக் குடியேற்றம் இந்தத் திட்டத்தின் ஊடாக மேலும் வலுப்பெற்று மிக குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவ ட்டம் சிங்கள மயமாக்கப்படும் அபாயம் உள்ளது.

1948 ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அதனால் 1959 ஆம் ஆண்டு அம்பாறை சிங்களப் பிரதேசமும் 1977 ஆம் ஆண்டு சேருவில சிங்களப் பிரதேசமும் உருவாக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பல சிங்களப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன. இது நல்ல உதாரணம். இதேபோல் ஹிபுல் ஓயா திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் புதிய சிங்கள பிரதேசங்கள் உருவாக்கப்படும். இலங்கை அரசாங்கம் தமிழர் நிலங்களில் குடியேற்றப்பட்ட 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 பேரைக் கொண்ட சிங்கள மக்களுக்கு ஒரு மாதிரியாகவும் தமிழ் மக்களுக்கு வேறு மாதிரியாகவும் செயற்படுகிறது என்றார்.
Share:

தமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா?

சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ்பிரமேச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கடந்த பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வுடனான ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் ஆணைக்கு புறம்பாக செயற்படுகின்றது. இந்த மக்கள் ஆணையில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கிறது.

முக்கியமாக இந்த கொள்கைகள் எல்லாம் கைவிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் சகலதும் கைவிடப்பட்டு வட, கிழக்கு இணைப்பு சம்மந்தமாகவும் சரி, சமஸ்டி சம்மந்தமாகவும் சரி இவ்வாறான விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணையில் இருந்து தாங்கள் முன்வைத்த கொள்கைகளில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கின்றது என்பதை மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன்வைத்த கருத்துக்களாக இருந்தது.

ஆகவே இவ்வாறான சூழல் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக தங்களது உரிமைகள் தொடர்பாக கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் தமிழரசு கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளோடு ஆலோசிக்காமல் தாங்கள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கின்ற காரணத்தினால் கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், கைதிகளினுடைய உண்ணாவிரதம் குறைந்தபட்சம் அவர்களது வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாமை போன்ற விடயங்களில் கூட அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக இருக்கின்றது. அவ்வாறான விடயங்கள் கூட மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் என்ற விடயங்கள் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இங்கு நாமல்கம, கலாபோகஸ்வௌ போன்ற இடங்களில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை போன்ற சிங்கள கிராமங்களில் இருந்து அழைத்து வந்து தமிழருடைய காணிகளை பறித்தெடுத்து சிங்கள பெயர்களை சூட்டி குடியேற்றப்பட்ட மக்களிற்கு அந்த காணிகளை தாரைவார்த்து கொடுப்பதற்கான உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த சம்பவம் என்பது நேற்று நடைபெற்றிருக்கிறது.

நல்லாட்சி என்கிற இந்த அரசாங்கத்தில் கூட எந்தவித மாற்றங்களுமின்றி மகிந்த எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை செய்தாரோ அந்த நிகழ்வுகளிற்கே தற்போது உறுதி வழங்கி வைக்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமையானது தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்துடன் உடந்தையாக செயற்படுகிறார்களா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இவ்வாறான விடயங்கள் ஆரோக்கியமான விடயங்கள் அல்ல கூட்டமைப்பு என்கின்ற பேரில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பாக சரியான முடிவுகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுக்க வேண்டும் என்றும் மத்தியகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை எடுப்பதற்காக எமது கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாத முதலாவது வாரத்தில் நடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்கின்ற நிலைமை இருந்தால் கூட சில வேளைகளில் பிற்போடப்படலாம் என்கின்ற கருத்துக்களும் இருக்கின்றன. எனினும் அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து போட்டியிடுவது என்பது தொடர்பாக அரசியல் குழு தீர்மானிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அரசியல் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.
Share:

Popular Posts